முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு 'ஓ' போட்டதுதான் மிச்சம்...! - இபிஎஸ்
விஞ்ஞான உலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொய் எடுபடாது என சாடியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் நல்லதம்பி களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நல்லதம்பியை ஆதரித்து திருவள்ளூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, " திருவள்ளுரில் வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மருத்துவமனையை கொண்டு வந்தது அதிமுக. அதுமட்டுமின்றி 11 அரசு மருத்துவ கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது, ஆனால் திமுக 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரியை கூட கொண்டுவரவில்லை" என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் "ஸ்டாலினின் ஆட்சி ஒரு இருண்ட ஆட்சி. ஆனால் அதிமுக ஆட்சி மக்களுக்கு ஒரு பொற்கால ஆட்சி. பழவேற்காட்டில் ரூ.26 கோடியில் முகத்துவாரம் அமைக்கப்பட்டது. திருவள்ளூரில் சட்டக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. சென்னை-திருவள்ளூர் 4 வழிச்சாலை கொண்டுவரப்பட்டது.அதிமுக ஆட்சியில் மத்தியில் போராடி பல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால், அவற்றை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது" என சாடினார்.
மேலும் போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கஞ்சா ஒழிப்பில் "ஓ" போட்டது தான் மிச்சம் எனவும், இந்தியாவில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது எனவும் விமர்சித்தார்.
What's Your Reaction?