போதைப் பொருள் விவகாரம்... திமுக எடுத்த நடவடிக்கை என்ன? - இபிஎஸ்
" திமுக-விற்கு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்"
போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்றாண்டு கால மக்கள் விரோத அரசின் அவலங்களை நாங்கள் எடுத்துக் கூறுகிறோம், ஆனால், நானே முதல்வன் - தமிழ்நாடே நாட்டில் முதன்மை மாநிலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி வருகிறார் என விமர்சித்துள்ளார்.
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தபின், எங்கே தனது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில், நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 29 நாட்களில் 402 பேர் கைது என்று செய்திக் குறிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு முன்புவரை, இந்த 402 பேர் சுதந்திரமாக போதைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது யார்?. மேலும், இதுபோன்ற சிறு சிறு குற்றவாளிகளை கைது செய்வதைப் போல், போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?" எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் மக்கள், தமிழ்நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய மக்கள் விரோத திமுக-விற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?