பறக்கும் படை கெடுபிடி... கட்டுக்கட்டாக சிக்கும் பணம்...

கரூரில் மட்டும் ரூ.10.39 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.

Mar 18, 2024 - 10:40
பறக்கும் படை கெடுபிடி... கட்டுக்கட்டாக சிக்கும் பணம்...

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பறக்கும் படை சோதனையில், பல லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன...

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை சோதனைச் சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிவன் என்பவர் சிவகாசியில் இருந்து இயக்கி வந்த ஆம்னி வேனில், உரிய ஆவணம் இன்றி ரூ.5.31 லட்சம் ரொக்கம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல், வைரமடை சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.02 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோல, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த ரூ.2.06 லட்சம் ரொக்கத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா அருகே நடத்தப்பட்ட சோதனையில், கனரக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.70 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், பணத்தை கொண்டு வந்தவர்கள் வாழப்பாடியில் உப்பு மற்றும் கோல மாவை விற்பனை செய்துவிட்டு, வேதாரண்யம் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட பணம் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில்  ஒப்படைக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் நடைபெற்ற  சோதனையில், கோவை மாவட்டம் கலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளி நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow