டிரைவர் இல்லாமல் நிலத்தை உழும் டிராக்டர்: பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் அசத்தல்

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் நேற்றையத் தினம் (ஜூலை 21) அதன் ஆராய்ச்சி பண்ணையில் ஓட்டுநர்கள் இல்லாமல் இயங்கும் தானியங்கி டிராக்டரினை விவசாயிகள் மத்தியில் இயக்கி அசத்தியுள்ளது.

டிரைவர் இல்லாமல் நிலத்தை உழும் டிராக்டர்: பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் அசத்தல்
punjab agricultural university driverless tractor

இணையத்தில் இப்போது அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவினால் (artificial Intelligence) ஒவ்வொரு துறையிலும் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து தான்.

இந்நிலையில், சத்தமில்லாமல் விவசாயத்துறையில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டுள்ளாது பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம். தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான (GNSS - Global Navigation Satellite System) தானியங்கி டிராக்டரினை (automatic tractor) வெற்றிகரமாக பரிசோதித்து விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு:

நிலத்தை டிராக்டர் கொண்டு உழுவது தற்போதைய காலத்தில் பெரிய விஷயமல்ல. ஆனால், டெஸ்லா கார் மாடலில் ஆள் யாருமின்றி தானாக டிராக்டர் நிலத்தை உழுதால் எப்படியிருக்கும்? அதனை சாத்தியப்படுத்தியுள்ளது பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம்.

விவசாயத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழ்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உட்புகுத்தி துல்லியமான விவசாயத்தினை மேற்கொள்ளும் வகையில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன.

அந்த வகையில், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தானியங்கி டிராக்டரில், ஸ்டீயரிங்கானது செயற்கைக்கோள் சிக்னல்கள், சென்சார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தானாக இயங்குகிறது. விவசாயிகள் டிராக்டரினை இயக்கும் போது, நிலத்தில் சில பகுதிகள் சரியாக உழவு செய்ய முடியாமல் போகின்றன. இந்த ஆட்டோமெட்டிக் முறையில், அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது. துல்லியமாக நிலத்தினை உழவு செய்வதால், விதை-உரம்- எரிபொருள் போன்றவற்றை விவசாயிகள் தேவைக்கேற்ப பயன்படுத்த முடிவதோடு உற்பத்திச் செலவினை கணிசமாக குறைக்கலாம் என பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் நாற்று நடவு இயந்திரம்:

தானியங்கி டிராக்டர் மட்டுமல்லாமல், PAU ஒரு ரிமோட் கண்ட்ரோல்டு நெல் நாற்று நடவு இயந்திரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான இயந்திரத்தை, விவசாயிகள் நிழலான இடத்தில் அமர்ந்தாவறே ரிமோட் கொண்டு இயந்திரத்தை இயக்க முடியும். இது விவசாயிகளின் உடல் உழைப்பைக் குறைப்பதுடன், ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வாகவும் அமைந்துள்ளது.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சத்பீர் சிங் கோசல் தலைமையில் நேற்று நடைப்பெற்ற கள ஆய்வு பரிசோதனையின் போது மூத்த வேளாண் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow