திருமங்கலம் புதிய பேருந்து நிலையம்..மக்கள் பணத்தை விரயம் செய்வதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு...
மதுரை திருமங்கலம் பேருந்து நிலையத்தை இடிப்பதற்கு அரசு வெளியிட்ட நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக உயர்நீதின்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், "37 ஆண்டுகளுக்கு முன் திருமங்கலம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மக்கள் தொகையும் வாகனங்களும் அதிகரித்ததால் வேங்கட சமுத்திரத்தில் ரூ.22 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தற்போது பேருந்து நிலையம் கட்டுவதற்கு பதிலாக திருமங்கலம் பேருந்து நிலையத்தை இடித்து மீண்டும் கட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம் பேருந்து நிலையத்தை இடிக்கத் தடை விதித்து, வேங்கட சமுத்திரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தற்போதைய நிலை குறித்த அரசின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2018 முதல் 2023 வரை திருமங்கலம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 110 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 133 பேர் காயமடைந்தாகவும், இது அரசின் கொள்கை ரீதியான முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிபதி, "நெல்லை அரசு பொறியியல் கல்லூரியின் அறிக்கையின்படி வேங்கடசமுத்திரம் பகுதி போதுமான அடிப்படை வசதிகளோடு இல்லை. பேருந்து நிலையம் அமைக்க அது போதுமான இடம் அல்ல எனக் குறிப்பிடுகிறது. அப்படியிருக்க எந்த அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. திருச்சி என்ஐடி தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலைய கட்டிடம் நல்ல நிலையில் இருப்பதாகவே குறிப்பிடுகிறது. திருமங்கலம் பகுதியில் ஏற்கனவே அமைந்துள்ள பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவது என்பது எந்த விதமான பலனையும் அளிக்காது. இது பொதுமக்களின் பணத்தை விரையம் செய்வதாக அமையும். ஆகவே, திருமங்கலம் பேருந்து நிலையத்தை இடிக்கும் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் நெரிசல், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு திருமங்கலம் பேருந்து நிலையத்தை அமைக்க மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
What's Your Reaction?