குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமானது; குழந்தைகளை பள்ளிக்கு மட்டும் அனுப்புங்கள், மற்றதை அரசு பார்த்துக்கொள்ளும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றவர்களுக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மூர் மார்கெட் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தா.மோ அன்பரசன் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடற்ற குடும்பங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திமுக அரசு அரசு வீடற்றவர்களின் 22 ஆண்டுக் கால கனவை தற்போது நனவாக்கியுள்ளது. சொல்வதைச் செய்யும் அரசாகவும், செய்வதை முன்கூட்டியே சொல்லும் அரசாகவும் திராவிட மாடல் செயல்பட்டு வருகிறது.
அரசு வழங்கியுள்ள வீடுகளை மக்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமான ஒன்று. குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அனைவரும் தங்கள் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பினால் மட்டும் போதும், மற்றதை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இவ்வளவு காலம் உங்களுக்கு வீடு இல்லாத காரணத்தால் அரசு ஆவணங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இனி அரசு ஆவணங்களான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, இருப்பிட சான்றிதழ் என அனைத்துமே எளிமையாகக் கிடைக்கும். நீங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எல்லோரும் போல முன்னேறி செல்லாலாம். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. மகளிர்க்கும், மாணவர்களுக்கும் ஏராளமான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. எங்களுக்கு எப்படி தமிழ்நாடு முதல்வர் பிராண்ட் அம்பாசிட்டரோ, அதேபோல்தான் பயனாளிகளான நீங்கள் தமிழ்நாடு அரசுக்கு பிராண்ட் அம்பாசிட்டர் என்றார்.