ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, என்கவுன்டருக்கும் தொடர்பில்லை- காவல்துறை இணை ஆணையர் விளக்கம்

ரவுடிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்பது காவல்துறை நோக்கமல்ல. சட்டப்படியே காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.

Sep 23, 2024 - 12:42
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, என்கவுன்டருக்கும் தொடர்பில்லை-  காவல்துறை இணை ஆணையர் விளக்கம்

பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி 13 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை தாதா நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன், ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகப் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் ஆந்திராவில் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீசிங் ராஜாவைத் தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது காரில் தப்பியோடியதாகச் சொல்லப்பட்டது. மேலும், வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் தேடப்படும் குற்றவாளியாக சீசிங் ராஜா தாம்பரம் காவல் ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஆந்திராவில் கடப்பா அருகே பதுங்கி இருந்தபோது கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரது மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,  போலீசார் தன் கணவரை போலி என்கவுன்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கொலையில் அவருக்குத் தொடர்பில்லை என்றும் சீசிங் ராஜாவை என்கவுன்டரில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலயில், கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா இன்று காலை சென்னை நீலாங்கரை அருகே மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட முயன்றதால், என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்காரணமாக ராயப்பேட்டை மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், சீசிங் ராஜா என்கவுன்டர் குறித்து சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,  ராஜா என்ற சீசிங் ராஜா இன்று என்கவுன்டர் செய்யப்பட்டார். வேளச்சேரி பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் சீசிங் ராஜா தேடப்பட்டு வந்தார். ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது, கள்ளத்துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் மீது 2 முறை சுட்டார்.

பின்னர் தற்காப்புக்காக போலீசார் சீசிங் ராஜாவைச் சுட்டனர்.இதில் அவர் கீழே விழுந்தார். பின்னர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.  ரவுடிகள் யாரைப் பிடித்தாலும், அவர்களின் குடும்பத்தினரை வைத்து வீடியோ எடுத்து என்கவுன்டர் செய்யப்போவதாக வீடியோ எடுத்து டிரெண்ட் செய்யப்படுகிறது.  ரவுடிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்பது காவல்துறை நோக்கமல்ல. சட்டப்படியே காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் பட்சத்தில் தற்காப்புக்காகவே போலீஸ் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow