சென்னை காவல் ஆணையருக்கு பறந்த உத்தரவு- மனித உரிமை ஆணையம் அதிரடி
சென்னை காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவு

சென்னை காவல் ஆணையர் அருண் வருகிற 21ஆம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் இனி பேசுவோம் என கூறியது, காவல்துறை மரணங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மூன்று ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாக, திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களது குடும்பத்தினரிடம் ரவுடிகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் என்கவுன்டர் செய்யப்படும் என கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது தொடர்பான காட்சிகளை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில் ரவுடிகளுக்கு புரியும் மொழி என்றால் என்ன என்று நேரில் ஆஜராகி விளக்கும்படி சென்னை காவல் ஆணையர் அருண், திருவெற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோ மற்றும் ஆய்வாளர் ரஜினி ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதன்படி, திருவொற்றியூர் உதவி ஆணையர் இளங்கோ, ஆய்வாளர் ரஜினி ஆகியோர் மாநில மனித உரிமை ஆணையத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் எடுத்துரைத்ததாகவும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் உதவி ஆணையர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்று வந்து மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என காவல் ஆணையர் அருணுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேரில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.பின்னர் வருகிற 21ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
What's Your Reaction?






