கார் மோதி பெண் காவலர் காலில் எலும்பு முறிவு

மதுபோதையில் கார் ஓட்டியபடி வந்து பெண் காவலர் மீது மோதியதில் பெண் காவலர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Oct 14, 2024 - 16:29
கார் மோதி பெண் காவலர் காலில் எலும்பு முறிவு
accident

வேலூர் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் காவலர் லோகேஸ்வரி (23) இவர் தற்போது கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை காவலர் லோகேஸ்வரி கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள டென்ஸ் ஸ்கொயர் மால் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டீ அருந்துவதற்காக சென்ற காவலர் லோகேஸ்வரி கேம்ஸ் வில்லேஜ் சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போலீஸ் பூத் மற்றும் பெண் காவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் காவலர் லோகேஸ்வரியின் வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் காவலர் லோகேஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் லோகேஸ்வரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.‌ 

பின்னர் தகவல் அறிந்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸார் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அடையாறு ராஜா அண்ணாமலை புரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (29) என்பதும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அவர் கார் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.‌ மேலும் இவர் பிரபல தனியார் கார் விற்பனை செய்யும் ஷோரூமில் மேலாளராகப் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்தது ‌. இதனையடுத்து போலீஸார் மதுபோதையில் காரை ஓட்டி வந்து பெண் காவலர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.‌ மேலும் அவரது காரை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow