Asia cup 2025: ஸ்ரேயாஸ் என்ன தவறு செய்தார்? கேள்விகளை எழுப்பும் முன்னாள் வீரர்கள்

உள்ளூர் தொடர்கள், ஐபிஎல் என தொடர்ச்சியாக தன் திறமையினை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Asia cup 2025: ஸ்ரேயாஸ் என்ன தவறு செய்தார்? கேள்விகளை எழுப்பும் முன்னாள் வீரர்கள்
former stars question shreyas iyer omission from india asia cub t20 side

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உட்பட மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் விளையாட உள்ளது. ஓமன், ஹாங்காங், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற கத்துக்குட்டி அணிகளும் பங்கேற்கவுள்ளன.

ரோகித், கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில் சூர்யக்குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சந்திக்கும் மிகப்பெரிய டி20 தொடராக ஆசிய கோப்பை இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், நேற்றையத் தினம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் டி20 இந்திய அணியின் கேப்டன் சூர்யக்குமார் யாதவ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியினை அறிவித்தார்கள்.

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லிற்கு, டி20 தொடரில் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில், அபிஷேக் ஷர்மா, ஜித்தேஷ் ஷர்மா, ஹர்ஷித் ராணா, திலக் வர்மா, ஷிவம் தூபே போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகிய ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் ஆசியக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறவில்லை.

ஸ்ரேயாஸின் பெயர் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. முன்னாள் வீரர்களும் தேர்வுக்குழுவினை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

"ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகப்பெரிய ஆச்சரியம்" என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் X வலைத்தளத்தில் (முன்னர் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் என்ன தவறு செய்தார்?

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர், அஸ்வின் தனது யூடியூப் சேனலான ’ஆஷ் கி பாத்தில்’ இந்திய அணியின் தேர்வு குறித்து பேசுகையில், “ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் ஆகியோர் பெயர் இடம்பெறாதது  வருத்தமளிக்கிறது. இது கொஞ்சமும் நியாயமில்லை. ஸ்ரேயாஸ், ஷார்ட் பால் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு வந்தார். ஆனால், அதனை சரிசெய்து கடந்த சில தொடர்களில் தனது திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். 

ஐபிஎல் தொடரில் ரபாடா,பும்ரா போன்றவர்களின் பந்துகளை மிகச்சிறப்பாக கையாண்டு பவுண்டரிகளை விளாசினார். கொல்கத்தா அணியின் கேப்டனாக சிறப்பாக அணியினை வழிநடத்தி கோப்பையினை வென்றார். கடந்த ஆண்டு, பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி அழைத்துச் சென்றார். அப்படியானால், ஸ்ரேயாஸ் என்ன தவறு செய்தார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

20 பேரில் கூட ஸ்ரேயாஸ் இல்லையா?

இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர், ஜியோ ஹாட்ஸ்டாரிடம் அணியின் தேர்வு குறித்து பேசுகையில், "ஷ்ரேயாஸ் ஐயர் 20 பேர் கொண்ட அணியில் இடம்பெறாததற்கு என்ன காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் 15 பேர் கொண்ட அணி பற்றி கூட பேசவில்லை. காத்திருப்பு வீரர்களையும் சேர்த்து, 20 பேர் பற்றியே பேசுகிறேன்.

என் பார்வையில் டி20 போட்டிகளில், ஸ்ரேயாஸ் ஐயரினை பற்றி தேர்வுக்குழு கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பது தெளிவாக புரிகிறது" என்றார்.

தேர்வுக்குழுவின் விளக்கம் என்ன?

ஸ்ரேயாஸ் அணியில் இடம்பெறாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், “ஷ்ரேயாஸைப் பொறுத்தவரை அணியில் அவர் இடம்பெறாமல் போனதற்கு, இது அவருடைய தவறோ, எங்களுடைய தவறோ அல்ல. இந்த நேரத்தில், நீங்கள் 15 பேரைத் தேர்வு செய்யலாம். அவர் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்” என பதிலளித்துள்ளார்.

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்

காத்திருப்பு வீரர்கள்: ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow