டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கியது ஏன்? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தலைநகர் டெல்லியில், முதல்வர் ரேகா குப்தாவை ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் முதல்வர் வீட்டினை நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
புதன்கிழமையான இன்று காலை (ஆகஸ்ட் 20) டெல்லி சிவில் லைன்ஸில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் 'ஜன் சன்வாய்' நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு நபர், முதல்வர் ரேகா குப்தாவினை தாக்கியுள்ளார். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் முதலில் முதலமைச்சரிடம் சில ஆவணங்களைக் கொடுத்தார். அதனை முதல்வர் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென்று அந்த நபர் தாக்கினார் என தெரிவித்துள்ளார்.
தாக்கிய நபர் யார்?
குற்றம் சாட்டப்பட்ட நபர் ராஜேஷ் சகாரியா (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கோதாரியா சாலையில் உள்ள கோகுல் பூங்காவில் தனது மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
ராஜேஷ் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், ராஜ்கோட் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று ராஜேஷின் தாயார் பானுபென் சகாரியாவிடம் விசாரணை செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியது இதற்காகவா?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பானுபென், ”ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான தனது மகன் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாதவர்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மகன் ஒரு விலங்கு பிரியர் என்றும், தேசிய தலைநகரின் தெருக்களில் இருந்து அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ராஜேஷ் டெல்லி சென்றதாகவும் பானுபென் கூறியுள்ளார்.
"அவர் நாய்கள், பசுக்கள் மற்றும் பறவைகளை அதிகம் நேசிக்கக்கூடிய நபர். டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்து அவர் வருத்தமடைந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஹரித்வாருக்குச் சென்றார், பின்னர் நாய்களுக்கு ஆதரவாக டெல்லிக்குச் சென்று போராட்டங்களில் பங்கேற்கப் போவதாக எங்களிடம் தொலைபேசியில் தெரிவித்தார். எப்போது திரும்பி வருவாய் என்று நாங்கள் கேட்டபோது, அவர் தொலைபேசியில் வேறு எதுவும் தெரிவிக்கவில்லை” என ராஜேஷின் தாயார் பானுபென் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஷாலிமார் பாக் நகரில் உள்ள முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டினை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ் நேற்றைய தினம் நோட்டமிட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை ஆணையர், தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் முதல்வர் ரேகா குப்தாவின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர்.
What's Your Reaction?

