இறுதி நாட்களில் முக்கிய மசோதாக்கள்.. மத்திய அரசுக்கு எம்பி கனிமொழி கண்டனம்!
”மத்திய அரசு முக்கியமான மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இறுதி நாட்களில் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது” என மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநில வாக்காளர் திருத்த பட்டியல் விவகாரம், வாக்குத் திருட்டு போன்ற பிரச்னைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், விவாதங்கள் ஏதுமின்றி சில மசோதாக்களை மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் குற்றச் செயல்களில் கைதாகும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தொடர்பான கேள்விக்கு, ”மத்திய அரசு முக்கியமான மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இறுதி நாட்களில் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது” என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், “எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களைப் படிப்பதற்கோ, விவாதிப்பதற்கோ, கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ போதிய அவகாசம் கிடைப்பதில்லை. இந்த அணுகுமுறை, நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதாக” தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து அச்சுறுத்தி வருவதாக தெரிவித்த கனிமொழி, பல மசோதாக்கள் மக்களால் உருவாக்கப்பட்ட அரசுகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் நிறைவேற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாஜக ஆட்சியில், மாநில அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவையா அல்லது மத்திய அரசாலும், தேர்தல் ஆணையத்தாலும் உருவாக்கப்பட்டவையா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கனிமொழி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள்:
”ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள், ”வாக்குத் திருட்டு” தொடர்பாகப் பல தரவுகளுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தி வருகிறோம்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






