சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடா..? நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்...
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ஏரிகளில் நீர்இருப்பு சரிவு
கோடை தொடங்கிய நிலையில், சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் தீர்த்து வருகின்றன. இதில், சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க அமைக்கப்பட்ட முதல் நீர்த்தேக்கம்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம். பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைதான், சென்னை மக்களின் தாகத்தை அரை நூற்றாண்டுக்கு மேலாக தணித்து வருகிறது.
என்னதான் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டாலும், முக்கிய நீராதாரமாக விளங்குவது பூண்டி நீர்த்தேக்கம்தான்.
கடந்த ஆண்டு இறுதியில் அடித்த பேய் மழையால், இந்த ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தன. இதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொளுத்திய வெயிலின் தாக்கத்தால், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சரசரவென சரிந்து வருகின்றன. இந்த நிலை தொடரும் பட்சத்தில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த 5 நீர் தேக்கங்களில் 8.4 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்த நிலையில், தற்போது 6.4 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 டிஎம்சி தண்ணீர் குறைந்துள்ளது.
இதில் குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,662 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில், தற்போது 0.773 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.
இதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு 3.099 மில்லியன் கன அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 2.245 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.
புழல் ஏரியின் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2,386 மில்லியன் கனஅடியாக இருந்த நிலையில், தற்போது 2,962 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இந்த ஒரு ஏரியைத் தவிர, பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு குறைந்துள்ளது.
இதுதவிர, சென்னைக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் வீராணம் ஏரி, தண்ணீர் வற்றி வறண்டு கிடக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீராணம் ஏரியில் 752.45 மில்லியன் கனஅடி நீர் இருந்த நிலையில், தற்போது வறண்டு கிடக்கிறது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ஏரிகளில், கோடைக்கு முன்பே தண்ணீர் வற்றியிருப்பது, எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில், இந்த 5 ஏரிகளின் நீர்மட்டம் மேலும் சரிந்தால், நிச்சயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
What's Your Reaction?