தமிழகத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு உடனே ஒதுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
                                    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க முடியவில்லை என்றும், 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு நிதி ஒதுக்காத போதிலும் தமிழக அரசு நிதி ஒதுக்கியதாகவும், நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நீதிபதிகள் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர்.
அதில், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். சமக்ரா சிக்ஷா திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கை - 2020 அமல்படுத்துவதை போன்றது என்பது உண்மை. கல்வி உரிமைச் சட்டதின்கீழ் உள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை என உத்தரவிட்டனர்.
மேலும், மாநில அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 2024 - 2025 ஆம் நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், 3586 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசு பங்கு 2151 கோடி ரூபாய். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதி 200 கோடி ரூபாய்க்கும் குறைவானது என்பதால், இந்த நிதியில் மத்திய அரசின் பங்கை ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இருக்காது.
அதனால் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்டத்தில் கூறியுள்ள படி, உரிய காலகட்டத்தில் இந்த தொகையை தனியார் பள்ளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தமிழக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            