ஹேமலதா உயிருடன் இருக்கிறாளா? தேடிய காவல்துறைக்கு கிடைத்த அதிர்ச்சித் தடயம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 34 நாட்களாக மாயமான 7 வயது சிறுமியைத் தேடி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்றைக் கண்டெடுத்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாள் மாயம்!
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள், கடந்த மாதம் 11-ம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பின்னர் பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை திடீரென மாயமானார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்காததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கிராமத்தில் முகாமிட்டு விசாரணை!
இதையடுத்து கடந்த 22 நாட்களுக்கும் மேலாக ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் நேற்று நேரடியாக ஆலம்பூண்டி கிராமத்திற்குச் சென்று சிறுமியின் தந்தை வடிவேலு, தாய் பவானி, பாட்டி மற்றும் எதிர்வீட்டுப் பெண் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார்.
தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குச் சென்ற அவர், விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.க்கள் வேல்முருகன், கீதா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இதுவரை விசாரிக்கப்பட்ட நபர்கள், சேகரிக்கப்பட்ட தடயங்கள், கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், புதிய கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தவும், சந்தேகத்திற்குரிய நபர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி. அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் அதிகாரிகள் நியமனம்!
விசாரணையை விரைவுபடுத்தும் வகையில், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் குமார், சாஸ்தா ஆகிய இருவரும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 34-வது நாளாக ஆலம்பூண்டி பகுதியில் முகாமிட்டுள்ள போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முட்புதரில் மனித எலும்புக்கூடு!
இதற்கிடையே, செஞ்சி அருகே உள்ள சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் சிறுமியைத் தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டனர். அப்போது சிறுமி மாயமான பகுதியில் உள்ள பரதன்தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு யாருடையது என்பதை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வனப்பகுதியில் வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என்றும் போலீசார் தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் பெற்றோர், கிராம மக்கள் எதிர்பார்ப்பு!
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமி குறித்து 34 நாட்களைக் கடந்தும் எந்தத் தகவலும் கிடைக்காதது பெற்றோரையும், கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், அதன் அடையாளம் உறுதி செய்யப்படாத நிலையில், சிறுமியின் கதி என்னவானது என்ற எதிர்பார்ப்புடன் பெற்றோரும் கிராம மக்களும் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?