மாலத்தீவு தேர்தல்.. அதிபர் முகமது முய்சுவின் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி

Apr 22, 2024 - 11:51
மாலத்தீவு தேர்தல்.. அதிபர் முகமது முய்சுவின் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

மாலத்தீவு அதிபர் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியாக நடத்தப்படும். அதன்படி கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றிருந்தார். அதிபர் தேர்தல் நடந்து சில மாதங்கள் கழித்து தான் நாடாளுமன்றத்திற்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிபராக யார் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே விரும்பிய சட்டங்களை கொண்டுவர முடியும். தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சிமற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்து வெறும் 8 எம்பிக்கள் மட்டுமே இருந்தார்கள். இதன் காரணமாக முய்சுவால் சில மாதங்களாக விரும்பிய சட்டத்தை கொண்டுவர முடியாமல் இருந்த நிலையில், நேற்று (21-04-2024) நாடாளுமன்ற எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. 

உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில் கிடைத்த முடிவுகளின்படி, மாலத்தீவு அதிபராக இருக்கும் முகமது முய்சு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுவிட்டார். 

93 தொகுதிகளுக்கு 130 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 326 வேட்பாளர்கள் களம் கண்ட மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இதில் முய்சு தலைமையிலான பிஎன்சி கட்சி 90 தொகுதிகளிலும், முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 89 இடங்களிலும் போட்டியிட்டது.

நேற்று (21-04-2024) வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி, பெரும்பான்மையான இடங்களில் முன்னணி வகித்து வந்த நிலையில், வெளியான தேர்தல் முடிவுகளின்படி, பிஎன்சி கட்சிக்கு 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களிலும், சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் இந்தியா குறித்து விமர்சித்து பேசி வந்தார். மேலும் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையிலும், மாலத்தீவில் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை நிர்வகிக்கவும் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை, அங்கிருந்து முய்சு வெளியேற உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow