ஹேமலதா உயிருடன் இருக்கிறாளா? செஞ்சியில் தொடரும் மர்மம்…திணறி வரும் காவல்துறை?
செஞ்சி 7 வயது சிறுமி மாயமான சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றுடன் 33 நாட்களையும் கடந்து எந்தவொரு தடயமும் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்போம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 33 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையிடமிருந்து வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டும் விசாரணையில் இதுவரை முக்கியத் தடயம் கிடைக்கவில்லை. இதனால் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 11-ம் தேதி செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மலை, காடு, கிணறுகளில் தீவிர தேடுதல்!
சிறுமியைத் தேடும் பணியில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலம்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைகள், குன்றுகள், விவசாயக் கிணறுகள், காடுகள், பாழடைந்த கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது. சிறுமி காணாமல் போன நாளில் அந்த வழியாகச் சென்ற 13 லாரிகள் மற்றும் அவற்றின் ஓட்டுநர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், சிறுமி காணாமல் போன நாளில் அவரது வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, நாமக்கல் பகுதியில் உள்ள முருகன் கோயில் அருகே சிறுமியைப் பார்த்ததாக ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் சிறுமியைக் கண்டுபிடிக்க உதவவில்லை.
நேரடியாகக் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி!
விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில் சென்னை சிபிசிஐடி காவல்துறை துணைத் தலைவர் விக்ரமன் நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், 33-வது நாளான இன்று வனத்துறையினருடன் இணைந்து சிபிசிஐடி போலீசார் சிறுவாடி காப்புக்காட்டில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ACE, JACK ஆகிய மோப்ப நாய்களின் உதவியுடன் நான்கு குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமி ஹேமலதா எங்கே சென்றார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. 33 நாட்களாக மகளின் வருகைக்காகக் காத்திருக்கும் பெற்றோருக்கு இன்றைய தேடுதல் பணியாவது நம்பிக்கையளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?