‘ஹாய்’ விமர்சனம்: கவின் - நயன்தாரா காதல் கதை எப்படி இருக்கு?
காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் கவினும், விருப்பமில்லாத திருமணத்திலிருந்து தப்பி வரும் நயன்தாரவும் , நட்பாகத் தொடங்கும் அவர்களின் உறவு காதலாக மாறியதா, இறுதியில் திருமணம் நடந்ததா என்பதைக் கூறும் ரொமான்டிக் காமெடி கதை.
குமுதம் விமர்சனக் குழு
காதலித்ததான் கல்யாணம் என்கிற கொள்கையுடைய கவினுக்குக் காதலி கிடைத்தாளா? கல்யாணம் நடந்ததா? மாமன் மகளே காதலிக்க மறுத்த தால் விரக்தியில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவரும் கவின்... விருப்பமில்லாத கல்யாணத்தை தடுக்க சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடிவரும் நயன்தாரா... இருவரும் ஒரு மியூச்சுவல் ஃப்ரெண்ட் மூலம் அறிமுகமாகின்றனர்.
நல்ல நண்பர்களாகப் பழகும் சூழலில், கவினுக்கு நயன் மேல் காதல் வருகிறது. அதைச் சொல்லும் நேரத்தில் இரண்டு பேர் வீட்டிலிருந்தும் அவர்களைத் தேடி வந்து, இருவரையும் அவரவர் ஊருக்கு அழைத்துச் செல்லக் கட்டாயப்படுத்த... கவின் ஒரு பொய்யைச் சொல்கிறார். அதனைத் தொடர்ந்து நடக்கும் கூத்துகளும், நயனுக்கு கவின் மேல் காதல் வந்ததா என்பதும்தான் க்ளைமாக்ஸ்!
கதை, காட்சி, வசனம் என எல்லாமே பல படங்களில் வந்ததுதான் என்றாலும், ரசிக்க முடிகிறது. கவின் நடிப்பு சுமார்! நயன் இயல்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பாக்யராஜ், ராதிகா, பிரபு, கதிர் பளிச்..!
சுஹாசினிதான் பெரிய மைனஸ். பொருத்த மில்லாத தேர்வு. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை பரவாயில்லை. இயக்குநர் விஷ்ணு எடவனின் அனுபவமின்மை மேக்கிங்கில் நன்றாகவே தெரிகிறது. நயனும் கவினும் சிவப்பு விளக்குப் பகுதிக்குச் செல்லும் காட்சி கதைக்குத் தேவையா? நயனுக்கு வேலை தரும் லூசுக் குடும்பத்தின் லொள்ளு, சத்யனின் சத்தில்லாத காமெடி அலுப்பைத் தந்தாலும்... முடிவு என்ன என்பது முதல் காட்சி யிலேயே தெரிந்தாலும்... படத்தைப் பார்க்கமுடிகிறது!
'ஹாய்' - முடிந்தால் எஞ்ஜாய்!
What's Your Reaction?