காங்கிரஸுக்கு பதிலடி… காக்ரோச்களுடன் அப்ரோச்... திமுக போடும் பலே கணக்கு!
காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க புதிய வியூகத்தை கையில் எடுத்திருக்கும் அறிவாலயம், இளைஞர் வாக்குகளை குறிவைக்க காக்ரோச்களுடன் கைக்கோர்க்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பரும் இல்லை என்பார்கள். கூட்டணி அரசியலில் இது இன்னும் அதிகமாகவே பொருந்தும். ஒருகாலத்தில் தோளோடு தோள் நின்ற கட்சிகள், தேர்தல் நேரத்தில் எதிரெதிர் திசையில் பயணிப்பதும், புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாவதும் வழக்கமான ஒன்று.
அந்த வகையில், தமிழ்நாடு அரசியலில் அடுத்தகட்ட கூட்டணி நகர்வுகள் குறித்த பேச்சுகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள புதிய இயக்கங்களை தங்கள் பக்கம் கொண்டு வர முடியுமா என்ற கணக்கில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வரிசையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற மாணவர் இயக்கத்தின் மீதான கவனம் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனிமரமாக நிற்கும் திமுகவின் கவனம் காக்ரோச்கள் மீது இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கொடுத்த ஷாக்கில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறாராம் ஸ்டாலின். எனவே, தி.மு.கவுக்கு துரோகம் செய்த காங்கிரஸுக்கு மறக்க முடியாத அரசியல் ரிவென்ச் கொடுக்க வேண்டும் என நினைக்கிறாராம்.
இது தொடர்பாக மாஜி அமைச்சர்கள் வேலு, நேரு, துரைமுருகன் மற்றும் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் ஸ்டாலின் அடிக்கடி ஆலோசனை நடத்திவரும் ஸ்டாலினிடம், ”தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க.தான்... எனவே, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், அதிகாரத்துக்கும் வரலாம். அரசியல்ரீதியாக இழந்த மரியாதையை பெறலாம். நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸை ஓட ஓட விரட்டலாம்” என்றெல்லாம் யோசனை சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையெல்லாம் ஸ்டாலின் ஒருகட்டத்தில் ஏற்றுக்கொண்டாலும்கூட, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க அவர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வேலு, ”நமக்கு பலமே மைனாரிட்டிகள்தான். முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் எல்லாம் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, அவசரப்பட வேண்டாம்” என்று ஸ்பீட் பிரேக் போட்டிருக்கிறாராம்.
அப்படியென்றால் மாற்று வழி என்ன என தீவிரமாக ஆலோசித்தபோதுதான் வந்துவிழுந்தது காக்ரோச் அப்ரோச் ஐடியா என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து, காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற ஆன்லைன் மாணவர் இயக்கம், நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது. வினாத்தாள் கசிவுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான உச்ச நீதிமன்ற நிவாரணம் என பல முக்கிய நிகழ்வுகளுக்கு இப்போராட்டம் வழிவகுத்தது. மேலும் பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தது. இதைத் தொடர்ந்துதான், காக்ரோச் ஜனதா பார்ட்டியை தன் பக்கம் இழுத்துப்போட முடிவு செய்திருக்கிறது தி.மு.க.
தற்போதைய நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு இயக்கம் தி.மு.க.வுக்கு மிக மிக அவசியம். இளைஞர்கள் மத்தியில் காக்ரோச் அமைப்புக்கு இருக்கும் செல்வாக்கு தேர்தலின்போது வாக்குகளாக மாறி கை கொடுத்து உதவும் என நினைக்கிறது தி.மு.க. தலைமை. தேர்தல் அரசியலில் ஈடுபடுபடப்போவதில்லை என காக்ரோச் ஜனதா பார்ட்டி தரப்பில் சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு இருக்கும் எழுச்சி தமக்கு கை கொடுக்கும் எனவும் அக்கட்சி நினைக்கிறது.
அதேபோல, தன்னைப்போலவே பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ், பினராயி விஜயன், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தேசியத் தலைவர்களையும் சேர்த்து மூன்றாவது அணி அமைக்கலாமா என்பது குறித்தும் தி.மு.க. தலைமை யோசித்துவருகிறதாம்.
இதுபோன்ற கணக்குகள் சாத்தியப்படும் பட்சத்தில், தேசிய அளவில் மிக சாதாரணமாக காங்கிரஸை தனிமைப்படுத்திவிடலாம் என தி.மு.க. தலைமை நினைப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, 'ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2029ல் அமல்படுத்த வாய்ப்புகள் அதிகம் என இத்திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி.சௌத்ரி தெரிவித்துள்ளார். அப்படியொரு நிலை வரும்போது தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை தன் பக்கம் இழுக்க த.வெ.க. முயற்சி செய்யும். அதற்கு முன்னதாகவே, காக்ரோச் கட்சியை வளைத்துப்போட்டு, மூன்றாவது அணியை அமைத்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அப்படியே அள்ளலாம் என ஸ்டாலின் நினைக்கிறாஎ என்கிறது அறிவாலய வட்டாரம்.
இப்படியான சூழலில்தான், ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, 'இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக ஸ்டாலின் இருந்தார்' என பாராட்டியது கவனிக்கத்தக்கதாகவும் புதுக் கூட்டணிக்கான தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிரதமர் பதவியை குறிவைத்து முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆடும் அதிரடி பாலிடிக்ஸால் அதிர்ந்துபோய் கிடக்கிறது காங்கிரஸ். இதன் தொடர்ச்சியாக, த.வெ.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி மீண்டும் அறிவாலயக் கதவுகளையே தட்டும் என சொல்லப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு, இப்போதே காக்ரோச் கட்சி உட்பட சிலரை பக்கத்தில் வைத்துக்கொண்டு கூட்டணியை பலப்படுத்திவிடலாம் என பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஆ.ராசா உள்ளிட்ட சிலர் தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படியாக பல கணக்குகள் அறிவாலய வட்டாரத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.
What's Your Reaction?