மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனைக் கோரி கணவர் மனு: நீதிபதி கடும் விமர்சனம்
விவகாரத்து கோரி தம்பதியினர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகள் நீதிமன்ற வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கரில் தன் மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி மனுவை நிராகரித்தது மட்டுமின்றி, கணவருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள ராய்கரைச் சேர்ந்த நபருக்கு ஏப்ரல் 30, 2023 அன்று திருமணம் நடைப்பெற்றது. திருமணமான தம்பதியினருக்குள் சில மாதங்களில் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 2024-ல், விவகாரத்து கோரி மனைவி சார்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது கணவர் ஆண்மையற்றவர் என்றும், இது முன்னரே அவரது குடும்பத்தாருக்கு தெரிந்தும் என்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளனர். விவகாரத்து வழங்குவதோடு எனக்கு ஜூவனாம்சமாக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையினை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு கணவர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு, தன் மனைவி தனது மைத்துனருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார் எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கணவர் தரப்பு குற்றச்சாட்டுகளை நிராகரித்து மனைவிக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
தீர்ப்பில் அதிருப்தி அடைந்த கணவர், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தான் ஆண்மையற்றவர் என குற்றச்சாட்டப்படும் நிலையில், தனது மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தக் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் வர்மா, கணவரின் மனுவை நிராகரித்தது மட்டுமின்றி, கன்னித்தன்மை பரிசோதனை கோரியதை கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.இத்தகைய கோரிக்கை, பெண்களுக்கு இந்திய அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அவர்களது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?






