டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்ட்யா காட்டடி... வங்கதேசத்சை பந்தாடிய இந்திய அணி!

சூர்யகுமார் யாதவ் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், ரிஷப் பண்ட் (24 பந்தில் 36 ரன்), ஷிவம் துபே (24 பந்தில் 34 ரன்) அதிரடியாக விளையாடினார்கள்.

Jun 23, 2024 - 13:40
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்ட்யா காட்டடி...  வங்கதேசத்சை பந்தாடிய இந்திய அணி!
இந்தியா வெற்றி

நார்த் சவுண்ட்: டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸுல் நடந்து வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து, 'சூப்பர் 8' சுற்றுக்கு ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. 

இதில் இந்திய நேரப்படி நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 11 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார்.

ஓரளவு சிறப்பாக விராட் கோலி 28 பந்தில் 37 ரன் எடுத்து தன்சிம் ஹசன் சாகிப் ஓவரில் ஆட்டமிழந்தார். பின்பு சூர்யகுமார் யாதவ் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், ரிஷப் பண்ட் (24 பந்தில் 36 ரன்), ஷிவம் துபே (24 பந்தில் 34 ரன்) அதிரடியாக விளையாடினார்கள்.

கடைசி கட்டத்தில் சிக்ஸர் மழை பொழிந்த ஹர்திக் பாண்ட்யா, 4 பெளண்டரி 3 சிக்ஸர்களுடன் 27 பந்தில் 50 ரன் விளாசினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 196/5 ரன்கள் குவித்தது. 

பின்பு விளையாடிய வங்கதேசம் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் (13 ரன்), தன்ஷித் ஹசன் (29 ரன்), தவ்ஹித் ஹரிதோய் (4), ஷகிப் அல் ஹசன் (11), முகமதுல்லா (13) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

அந்த அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (40 ரன்), ரிஷாத் ஹொசைன் (10 பந்தில் 24) போராடியும் பயனில்லை. 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 19 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, அர்தீப்சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow