தைரியம் இருந்தா செருப்பால அடிங்க... விஷாலை வெளுத்து வாங்கிய ராதிகா!
விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும் துணைக்கு நானும் வருகிறேன் என நடிகை ராதிகா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் ஒருவரே ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு பிறகு மலையாள திரையுலகில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடிகைகள், நடிகர்கள் இயக்குனர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது, மறுத்தவர்கள் திரை உலகில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக பகீர் புகார் எழுந்தது.
ஹேமா கமிஷன் அறிக்கை வெளிவந்ததிலிருந்தே பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருக்கிறது. தொடர்ந்து மலையாள சினிமாவில் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்டு வரும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து அண்மையில் பேசிய நடிகரும் நடிகர் சங்கப் பொதுச்செயலாளருமான விஷால், “யாராவது தவறாக நடந்துகொள்ள முயன்றார்கள் என்றால் செருப்பால் அடியுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது விஷாலின் இந்த பேச்சுக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான ராதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தமிழ் சினிமாவில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து குற்றச்சாட்டு கூறினார். அவரிடம் ஏன் இத்தனை நாட்கள் கழித்து சொல்கிறீர்கள்? இதற்கு என்ன சாட்சி உள்ளது? என பல கேள்விகளை கேட்டார்கள். ஒரு பெண்ணின் மனதில் ஓடக்கூடிய விஷயங்களை ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது. அந்த திறமையான பாடகி, தனது வாய்ப்புகளை இழந்து கஷ்டப்பட்டார். அவருக்காக யார் வந்து குரல் கொடுத்தார்கள்? திரைத்துறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியிருப்பது முறையான பதில் அல்ல. இது ஒரு தலைவர் பேசும் பேச்சு கிடையாது.
மேலும் படிக்க: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.... கண்கலங்கி பேசிய பாடகி ஷ்ரெயா கோஷல்!
நடிகைகள் குறித்து யூடியூபர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியிருப்பதை பார்த்தேன். விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நானும் வருகிறேன். பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க பெரிய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறை அல்லது நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் வரும்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
What's Your Reaction?