பாலியல் குற்றச்சாட்டு.. பிறந்த நாளில் மவுனம் கலைத்த ஜெயசூர்யா.. சட்டப்படி எதிர்கொள்வாராம்!
பொய் என்பது உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை தான் என்றுமே ஜெயிக்கும் என்று மலையாள நடிகர் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இந்த பிறந்த நாளை வேதனையான பிறந்த நாளாக மாற்றிய, பங்காற்றியவர்களுக்கு மிக்க நன்றி என்றும் அவர் கூறி உள்ளார்.
பாலியல் புகார் குற்றச்சாட்டுகளால் பரபரத்து கிடக்கிறது மலையாள திரை உலகம். தினசரியும் புகார்களால் பற்றி எரிகிறது. அம்மா ஆடிப்போய் இருக்கிறது. ஹேமா கமிஷன் அறிக்கையால் முன்னணி நடிகர்கள்,இயக்குநர்கள் மீதும் வழக்கு பாய தயாராக உள்ளது. பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி மலையாள நடிகைகள் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு நடிகைகளும் பேசத் தொடங்கியுள்ளனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்ற குரல்கள் எழுத்தொடங்கியுள்ளன. நடிகர் ஜெயசூர்யா, நடிகர் முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஹேமா கமிசன் அறிக்கை பற்றி முதன் முறையாக வாய் திறந்துள்ளார் மோகன்லால். இதனிடையே தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்முறையாக மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுநாள்வரை மவுனமாக இருந்த நடிகர் ஜெயசூர்யா தனது பிறந்தநாளில் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஜெயசூர்யா வெளியிட்டு உள்ள அறிக்கையில், எம் மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை எனது வழக்கறிஞர்கள் குழு கையாளும்.
மனசாட்சியற்ற எவருக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவது என்பது மிக எளிது. தவறான குற்றச்சாட்டை முன் வைப்பது மிக வலியை தரக்கூடிய விஷயம். பொய் என்பது உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை தான் என்றுமே ஜெயிக்கும்.
நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் நிச்சயம் தொடரும். நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்த நாளை வேதனையான பிறந்த நாளாக மாற்றிய, பங்காற்றியவர்களுக்கு மிக்க நன்றி என்று அவர் கூறி உள்ளார்.
What's Your Reaction?