ஜெயங்கொண்டம் பிடிகாசு திருவிழா.. அரிவாள் மீதேறி நடந்த பூசாரி.. 18ம்படி கருப்பசாமியை கும்பிட குவிந்த பக்தர்கள்

ஜெயங்கொண்டம் அருகே பிடிக்காசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. வீடு கட்டுதல், நகை வாங்குதல், நிலம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களுக்கு இந்த காசினை பயன்படுத்தும் போது இரட்டிப்பு பயன் கிடைக்கும் என்பது பக்தர்களும் நம்பிக்கையாகும்.

Apr 16, 2024 - 17:21
Apr 16, 2024 - 18:08
ஜெயங்கொண்டம் பிடிகாசு திருவிழா.. அரிவாள் மீதேறி நடந்த பூசாரி.. 18ம்படி கருப்பசாமியை கும்பிட குவிந்த பக்தர்கள்


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ பிரம்மசக்திபுரத்தில் 18-ம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பிடிக்காசு கொடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 9-ம் ஆண்டு பிடிக்காசு கொடுக்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

விழாவையொட்டி கருப்பசாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உறுமி மேளத்துடன், வான வேடிக்கையோடு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. 

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி வழிப்பட்டனர். பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கோவில் நிர்வாகியும், அருள்வாக்கு சித்தருமான தியாகராஜ சுவாமிகள் பக்தர்களுக்கு பிடிக்காசுகளை வழங்கி அருள்வாக்கு கூறினார். முன்னதாக கத்தி மேல் நடத்தல், கழுகு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற விழாவில் ஆந்திரா, பாண்டிச்சேரி, சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ஆரணி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது குறித்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவிக்கையில்,  ஒவ்வொரு ஆண்டும் பிடிகாசு திருவிழாவில் கலந்து கொள்வோம். கோவிலில் பூஜை செய்யப்பட்ட காசுகளை எடுத்துச் சென்று பூஜை அறையிலோ அல்லது பணப்பெட்டியிலோ வைத்தால் பணம் இரு மடங்கு சேரும்.  அதேபோன்று வீடு கட்டுதல், நகை வாங்குதல், நிலம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களுக்கு இந்த காசுடன் பயன்படுத்தும் போது இரட்டிப்பு பயன் கிடைக்கும் என்பது பக்தர்களும் நம்பிக்கையாக உள்ளது என அவர்கள்  தெரிவித்தனர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆலய பூசாரிகள் மற்றும் விழா கமிட்டி குழுவினர் செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow