இந்திய மாணவர் மர்ம மரணம்... கடத்தப்பட்டு கொலையா?.. தொடரும் உயிரிழப்புகள்.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?..

Apr 9, 2024 - 12:19
இந்திய மாணவர் மர்ம மரணம்... கடத்தப்பட்டு கொலையா?.. தொடரும் உயிரிழப்புகள்.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?..

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் திடீரென மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மர்ம மரணம், கொலை, விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கல்விக்காக நாடு விட்டு நாடு செல்லும் மாணவர்கள், பணத்திற்காக கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அப்துல் அர்ஃபாத் என்ற மாணவரும் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 25 வயதான அவர், ஒஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் 7-ம் தேதி முதல் முகமது அப்துல் அர்ஃபாத் திடீரென மாயமானார். அவரை தேடும் பணியில் அமெரிக்க காவல்துறையுடன் இணைந்து இந்திய துணை தூதரகமும் ஈடுபட்டு வந்தது. 

இந்த நிலையில், கிளீவ்லேண்ட் பகுதியில் முகமது அப்துல் அர்ஃபாத் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய துணை தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முகமது அர்ஃபாத்தின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அவரது உடலை குடும்பத்தினரிடம் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், மாணவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து மாணவரின் தந்தை முகமது சலீம் கூறியபோது,  "கடந்த மார்ச் 19-ம் தேதி அடையாளம் தெரியாத நபரின் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தனது மகனை கடத்தியதாகவும் 1200 டாலர்கள் கொடுத்தால் அவரை விட்டுவிடுவதாகவும் கூறினர்" என்று தெரிவித்துள்ளார். இதனால், அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளார்.

சமீபத்தில், ஹைதராபாத்தை சேர்ந்த சாய் கட்டே மற்றும் உமா சத்யசாய் கத்தே ஆகிய 2 மாணவர்கள் ஒஹியோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் என்ற மாணவர் ஒஹியோ மாகாணத்தில் மரணமடைந்திருந்தார்.

அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒஹியோ மாகாணத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. இதனைத் தடுக்க அமெரிக்க அரசும், இந்திய தூதரகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow