Tilak Varma Retired out: 5 பந்தில் 8 ரன்.. நான் தான் திலக் வர்மாவே வெளியே வர சொன்னேன்!

நேற்று லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் திலக் வர்மா “ரிட்டையர்ட் அவுட்” முறையில் வெளியேறியது விவாதங்களை கிளப்பியுள்ளது.

Apr 5, 2025 - 11:20
Tilak Varma Retired out: 5 பந்தில் 8 ரன்.. நான் தான் திலக் வர்மாவே வெளியே வர சொன்னேன்!
Tilak Varma Retired out

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டி மும்பை ரசிகர்களுக்கு ஆறாத வடுவாக மாறியுள்ளது எனலாம். ரோகித் ஷர்மா போட்டித் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இன்று விளையாட மாட்டார் என அறிவித்தார் ஹார்த்திக் பாண்டியா. இதனால் மைதானத்திற்கு வந்த ரோகித் ரசிகர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பே அப்செட் ஆகினர். 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி ஒருக்கட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என மும்பை ரசிகர்கள் முழுமையாக நம்பினார். ஆனால், இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிப்பெற்றது.

இதில் மும்பை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது கடைசி ஓவருக்கு முன்பு திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட் முறையில் களத்திலிருந்து வெளியேறியது தான். திலக் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, ​​மும்பை அணிக்கு ஏழு பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது, கையில் ஐந்து விக்கெட்டுகள் இருந்தன. ஏன் திலக் வர்மா வெளியேற்றப்பட்டார் என பல விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடைப்பெறுகிறது.

நான் தான் வெளியேற சொன்னேன்: மஹிலா ஜெயவர்த்தனே

இதற்கு மத்தியில் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே, திலக்கை ஓய்வு பெறக்கூறியது தனது முடிவு என்று கூறினார்.

அவர் கூறுகையில், “திலக் வர்மா, நிறைய நேரம் எடுத்துக் கொண்டார். கடைசி சில ஓவர் வரை நாங்கள் அவரது அதிரடி ஆட்டத்திற்காக காத்திருந்தோம். ஆனால், அவர் செய்ய இயலாத நிலையில் எனக்கு புதிதாக யாராவது ஒருவர் களத்தில் இறங்கினால் நன்றாக இருக்கும் என உணர்ந்தேன். இது கிரிக்கெட்டில் நடைப்பெறக்கூடிய ஒன்று தான். அவரை களத்திலிருந்து வெளியேற்றுவது நல்லதல்ல, இருப்பினும் நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அது தவிர்க்க இயலாத முடிவு” என குறிப்பிட்டுள்ளார்.

திலக் வர்மா களத்தில் இறங்கிய போது, ​​மும்பை அணி 8.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து இருந்தது. இலக்கு 200 ரன்களுக்கு மேல் இருந்த நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக்- சூர்யகுமார் யாதவ் இணை 48 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தனர். இதில் சூர்யகுமார் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். திலக் 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து இருந்தார்.

கடைசி 5 பந்தில் 8 ரன்:

சூர்யகுமார் விக்கெட் வீழ்ந்த நேரத்தில், மும்பை அணி கடைசி 23 பந்துகளில் 52 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. திலக் தான் சந்தித்த கடைசி 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். அதில் எட்ஜ் பட்டு சென்ற ஒரு பவுண்டரியும் அடங்கும். திலக் வர்மா வெளியேறும் போது, எதிர் முனையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட் முறையில் சென்ற போது 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட் ஆனது குறித்து, ஹார்த்திக் கூறுகையில், “எங்களுக்கு சில ஹிட் தேவைப்பட்டது (பவுண்டரி). ஆனால், திலக் வர்மாவால் அது முடியவில்லை. சில நாட்கள் கிரிக்கெட்டில் இதுப்போல் நடைப்பெறும். நாம் முயற்சிப்போம், ஆனால் அது நடைப்பெறாது.. அதனால் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow