இந்த முறை அப்படி ஆகாது- நம்பிக்கை கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
மழை வந்தாலும், முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தங்க வைக்க உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இந்த முறை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” முதலமைச்சர் கோப்பை போட்டிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். முதலமைச்சர் கோப்பைக்கு பரிசு தொகை மட்டும் ரூ.32 கோடி வழங்கப்படுகிறது.
சென்ற ஆண்டு 5 லட்சம் வீரர், வீராங்கனைகள் விண்ணப்பித்து போட்டியில் பங்கேற்றனர். இந்த ஆண்டு 12 லட்சம் வீரர், வீராங்கனைகள் விண்ணப்பித்து போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.36 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் இறுதி போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு முதலமைச்சர் வருகிற 24ஆம் தேதி பதக்கம், பரிசு வழங்க உள்ளார். முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மழையினால் பாதிக்கப்படாத வகையில் அதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை பாதிக்கப்பட்டாலும் ஒரிரு நாட்கள் நீட்டிப்பு செய்து போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, மழை தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் ஐந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மழை தொடர்பாக எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக எம்.எல்.ஏக்கள் கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த முறை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.மழை வந்தாலும், முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தங்க வைக்க உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். முன்னதாக முதலமைச்சர் கோப்பை ஜூடோ இறுதி போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பரிசு தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
What's Your Reaction?