தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. 2 கி.மீ. போக்குவரத்து பாதிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் சென்றதால் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் சென்றதால் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை, வார விடுமுறை நாட்கள் என்பதால் தென் மாவட்டத்தை சேர்ந்த பல லட்ச கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்க்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனம் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபோல் பல்லாவரம், குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இருசக்கர வாகனங்கள், தனியார் வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை அணி வகுத்து செல்வதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. நெரிசலை குறைக்கும் பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் தடைவிதித்துள்ளனர். மேலும் கனரக வாகனங்கள் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை வழியாக மீண்டும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கனரக வாகனங்கள் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
What's Your Reaction?