போதை பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு… 20-ம் தேதி குற்றப்பத்திரிகை மீது விசாரணை

Apr 16, 2024 - 19:08
போதை பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு… 20-ம் தேதி குற்றப்பத்திரிகை மீது விசாரணை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உட்பட 5 பேருக்கு மேலும் 4 நாள்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லியில் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்களை கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானேஷ்வர் சிங், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு 3,500 கிலோ போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார். 

இந்த வழக்கு ஜாபர் சாதிக்கின் வீடு, அலுவலகம் மற்றும் இயக்குநர் அமீரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தை என்ன செய்தார்கள்?..யாருக்கு கொடுத்தார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

                                                                             
 
இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி 5 பேருக்கும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்றுடன் காவல் நிறைவடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 5 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 4 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், வரும் 20ஆம் தேதி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow