ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி.. சஞ்சுவின் உழைப்பு வீணாய்ப் போனது..

May 8, 2024 - 07:59
ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி.. சஞ்சுவின் உழைப்பு வீணாய்ப் போனது..

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரில் நேற்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 

டெல்லி அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் மற்றும் ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 பந்துகள் மட்டுமே விளையாடிய ஜேக் ப்ரேசர் 3 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடித்தார். இதையடுத்து 5வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷாய் ஹோப் 1 ரன்னிலும், அக்சர் படேல் 15 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 

மறுபக்கம் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வந்த அபிஷேக், 65 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 221 ரன்கள் குவித்து. ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட் மற்றும் சாஹல், சந்தீப் சர்மா, போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 222 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களிமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் ஜாஸ் பட்லர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணைந்து அதிரடியாக விளையாடினர். 6 சிக்சர், 8 பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்திய சஞ்சு சாம்சன், 86 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கிய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி  அணி அபார வெற்றி பெற்றது.  டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல், ரஷிக் சலாம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

தற்போது புள்ளிப் பட்டியலில் டெல்லி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3-வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. இந்த அணிகள் ரன் ரேட்டில் மட்டும் வேறுபடுகின்றன. இதில், டெல்லி அணி மட்டும் 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் மற்ற 3 அணிகள் 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளன. இந்தக் கடும் போட்டிக்கு மத்தியில் அடுத்து வரும் போட்டிகளில் எந்த அணி வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow