பலத்த புயல் காற்று, ஆலங்கட்டி மழை! 4 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவு

Mar 31, 2024 - 21:08
பலத்த புயல் காற்று, ஆலங்கட்டி மழை! 4 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்

மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் ஆலங்கட்டி மழையின் எதிரொலியாக 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வரும் நிலையில், காற்றும் சூறாவளிபோல் சுழன்றடித்தது. இதனால் ஜல்பைகுரி, மைனாகுரி பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தெருக்கள் இருளில் மூழ்கின. பலத்த சூறைக்காற்றின் காரணமாக மரங்களும் சாய்ந்து சாலைகளில் விழுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

இதற்கிடையில், வீடுகளில் ஏற்பட்ட சேதங்களால் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், இதில் 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலத்த காயமடைந்த 57-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி, பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் நிதி மற்றும் பேரிடர் மேலான்மை நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மேற்குவங்கத்தில் சூறாவளிக் காற்று சுழன்றடித்தபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும், புயல் பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow