ஈனுலை ஆபத்துன்னு யார் சொன்னா? கொந்தளித்த எல்.முருகன்...
2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை இந்தியா அடைய வேண்டும் என்றால் ஈனுலை போன்ற வளர்ச்சி திட்டங்கள் அவசியம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியளார்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பிரதமரின் வருகை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றதாகவும், இதில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்ததாகவும் எல்.முருகன் கூறினார். கூடிய விரைவில் தமிழகத்திற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என அவர் உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எல்.முருகன், போதை கலாச்சாரம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவி உள்ளதாக குற்றஞ்சாட்டினார். திமுகவின் மிக முக்கிய நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடைய விசிக நிர்வாகியும் நீக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகி உள்ள இருவரையும் கைது செய்தால் அவர்கள் போதை பொருள்கள் மட்டும் கடத்தினார்களா, அல்லது ஆயுத கடத்தல் போன்ற பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டார்களா என்பது தெரிய வரும் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
ஈனுலை மக்களுக்கு ஆபத்து என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த எல். முருகன், ஆரம்பத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் பிரதமர் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பொதுமக்கள் அனைவரும் செலுத்தி கொண்டனர். கடந்த திமுக ஆட்சியின் போது தொடர் மின்வெட்டி இருந்தது. அதன் பின்னர் கல்பாக்கம் அணுஉலை அமைக்கப்பட்டு தற்போது மின்சார பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்பாக்கத்தில் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் ஈனுலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் ரஷ்யாவை தொடர்ந்து இரண்டாவது நாடாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுமுழுக்க முழுக்க சுயசார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற முன் முயற்சிகளால் தான் இந்தியா 2047-ல் வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்றும் எல்.முருகன் விளக்கம் அளித்தார்.
What's Your Reaction?