சத்தியம் செய்த தந்தை.. குடி போதையில் குடும்பத்தோடு பைக் பயணம்.. வியாசர்பாடியில் நடந்த விபத்து

சென்னை வியாசர்பாடியில் குடிபோதையில் பைக் ஓட்டிய தந்தையால் ஒன்றை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு குழந்தையும் மனைவியும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

May 15, 2024 - 17:15
சத்தியம் செய்த தந்தை.. குடி போதையில் குடும்பத்தோடு பைக் பயணம்.. வியாசர்பாடியில் நடந்த விபத்து

வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சங்கர். தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்தும் சங்கருக்கு நந்தினி என்ற மனைவியும், ரித்திக் என்ற ஒன்றரை வயது மகனும், கிருத்திகா என்ற 3 மாத பெண் குழந்தையும் உள்ளது. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர், அடிக்கடி மனைவி நந்தினியிடம் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் அண்மையில் சங்கர் குடித்துவிட்டு சண்டை போட்டதால் ஆத்திரமடைந்த நந்தினி கோபித்துக் கொண்டு மீஞ்சூரில் உள்ள தாய் வீட்டிற்குசென்றுள்ளார். இதனை தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக குடிபோதையிலேயே சங்கர் மீஞ்சூர் சென்றதாக கூறப்படுகிறது. 

நந்தினியின் தாயார் வீட்டிற்கு சென்ற சங்கர், இனி குடிக்க மாட்டேன் என்று கூறி மனைவி நந்தினி மற்றும் குழந்தைகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் மூலக்கடை பகுதியில் குடும்பத்தினரை சாப்பிட அமர வைத்து விட்டு அருகிலுள்ள மதுபான கடைக்கு சென்ற சங்கர் மது அருந்திய கூறப்படுகிறது. 

பின்னர் உணவகத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் இரு சக்கர வாகனத்தில் வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரி அருகே மனைவி, குழந்தைகளுடன் சங்கர், வந்து கொண்டிருந்தபோது போதை அதிகமானதால் எதிரே வந்த ஈச்சர் வாகனத்தில் நிலை தடுமாறி மோதி கீழே விழுந்துள்ளார். 

இந்த விபத்தில் கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை ரித்திக் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. 
மற்றொரு குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் வாகனத்தை இயக்கி ஒரு குழந்தையின் உயிர் பறிபோனதற்காக சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கைது செய்யப்படுவார் என போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

குடிபோதையால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போன சம்பவம் வியாசர்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow