”அம்மா உணவகத்திற்கு மூடுவிழா..” – தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா செய்து வருவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது தான் ‘அம்மா உணவகம்’. கூலித் தொழிலாளர்கள், ஏழை, எளிய சாமானிய மக்கள் குறைந்த விலையில் பசியாற தொடங்கப்பட்ட இத்திட்டம் அனைத்துதரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திட்டம் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநில முதலமைச்சர்களின் கவனத்தை பெற்று அங்கும் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை தங்களுக்கேற்றார்போல் பெயர் மாற்றி செயல்படுத்தினர். ஒரு இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை 5 ரூபாயிலும், பொங்கல், சப்பாத்தி என பல உணவுகள் குறைந்த விலையிலும் விநியோகிக்கப்பட்டன. இப்படி தரமாக கிடைக்கப் பெற்றதால் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை மக்கள் பாராட்டி வந்தனர்.
2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ‘அம்மா உணவகங்களை’ மூட திட்டமிட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்க, ’அம்மா உணவகம்’ தொடர்ந்து செயல்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆலந்தூர் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் அரசுப் பள்ளி இயங்கிவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://x.com/EPSTamilNadu/status/1837041856523251890
அதில், ”அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு. தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது. எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து, அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக இதுபோன்ற உணவகங்களை திறப்போம் என்று சொல்லிவருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளர்.
What's Your Reaction?