6 கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள்.. பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த MP கார்த்தி சிதம்பரம்
தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமரை சந்தித்து மனு அளித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் வெறிப்பிடித்த தெரு நாய்கள் (ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவை) கடித்து மனிதர்கள், கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக மாறி வருகிறது.
சமீபத்தில் கூட நாய் கடியினால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாய் கடியினால் இறக்கும் ஆடுகளுக்கு தலா ரூ.6000, கோழிகளுக்கு ரூ.200, மாடுகளுக்கு ரூ.37,500 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது.
பிரதமரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்:
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் தெருநாய்கள் குறித்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இந்தியா முழுவதும் தெரு நாய்களின் எண்ணிகை கட்டுபடுத்துவது மற்றும் ரேபிஸ் தொற்று பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார். இதுத்தொடர்பாக தனது X தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்று பிரதமரை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் பிரச்னைகள் குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தேன். தெருநாய் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் மட்டும் சுமார் 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.
இந்தியாவில் ரேபிஸ் நோய் தொற்று பரவலும் அதிகமாக உள்ளது. உலகளவில் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36% இந்தியாவில் நிகழ்வது தான். விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC-Animal Birth Control) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதனை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளூர் அமைப்புகள் தற்போது தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றன. போதிய நிதி இல்லாத காரணத்தினால் அவர்களால் அதனை திறம்பட செயல்படுத்த இயலவில்லை. இதனால் தேசிய அளவிலான அமைப்பு, உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து இந்த பிரச்சினையினை கையாள வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளேன்” என கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






