மலையாள திரையுலகில் பாலியல் சுரண்டல்.. ஆக்ஷன் எடுத்த பினராயி விஜயன்!
கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது ஹேமா கமிட்டி.
அந்த அறிக்கையில் மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சூட்டிங் செல்லும் இடங்களில் நடிகர்கள் ஹோட்டல் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது உட்பட பல மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. இவ்வளவு மோசமான நிலைமை இருந்தும் இது குறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாகவும், சமூகத்தில் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகவும் பாலியல் சுரண்டலில் ஈடுபவர்களுக்கு எதிராக பலரும் புகாரளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் என்பது வழங்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை. சூட்டிங்கின் போது பெண்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகிறார்களாம் என்றெல்லாம் கமிட்டி அளித்த அறிக்கையில் கூறப்பட்டது பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், இளம் நடிகைகள் மலையாள திரைத்துறையின் மூத்த நடிகர் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் மலையாள திரைத்துறையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, நடிகைகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி, கேரள டிஜிபி ஸ்ப்ரஜன் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், 4 மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார்.. மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி, ஹிப் ஹாப் ஆதி!
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் டொவினோ தாமஸ், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நபர்கள் தானாக கேரள சினிமா சங்கமான அம்மாவில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்றார். சினிமாத்துறையில் அனைவரும் பாதுகாப்பாக உணர இதை செய்யவேண்டும் எனவும் கூறினார்.
What's Your Reaction?