ஓபிஎஸ் மீதான் சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
                                கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவிவகித்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றி 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்த நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எதிரான சொத்து குவிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உள்ளிட்ட இரண்டு பேர் இறந்துவிட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அறிவித்த நீதிபதி, வழக்கை மதுரை எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
நவம்பர் 27ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சிவகங்கை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆவணங்களை பெற்ற பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நேரில் ஆஜராகும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பிணை பத்திரத்தை பெற்று ஜாமீன் வழங்கலாம் என மதுரை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால், சம்பந்தப்பட்டவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்விசாரணை அறிக்கையை துணை அறிக்கையாக எடுத்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கின் விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி 2025 ஜூன் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அது குறித்து உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மதுரை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            