மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கில் நகைகள் பறிமுதல்! இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி சிக்கியது எப்படி?

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செல்போன் சிக்னல் மூலம் கிடைத்த துப்பும் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்ட பின்னணியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Nov 14, 2026 - 19:30
மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கில் நகைகள் பறிமுதல்! இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி சிக்கியது எப்படி?
Madurai Tanishq Robbery Twist !

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்போன் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை!

மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனிஷ்க் தங்க நகைக்கடையில் கடந்த 12ஆம் தேதி துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பின்புறத்தில் இருந்த கட்டுமான சாரம் மற்றும் லிஃப்ட் செல்லும் வழியை பயன்படுத்தி உள்ளே நுழைந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் சுமார் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மதுரை மாநகரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய கொள்ளையர்கள்!

கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில் நிஷாந்த் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால், அவரை மையமாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள நிஷாந்த், இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததன் மூலம் தொடர்புடைய நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்துள்ளனர்.

5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைமறைவாக உள்ள நிஷாந்தின் தந்தை மூலமாக இந்த நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகளை மீட்பதற்கும், தலைமறைவாக உள்ள நிஷாந்தை கைது செய்வதற்கும் போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா பிரபலம் கைது செய்யப்பட்டிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow