இந்தப் பக்கம் காவிரி.. அந்தப் பக்கம் பாலாறு.. உரிமைகளை விட்டுக்கொடுக்கிறதா தமிழ்நாடு அரசு?

Feb 26, 2024 - 18:45
இந்தப் பக்கம் காவிரி.. அந்தப் பக்கம் பாலாறு.. உரிமைகளை விட்டுக்கொடுக்கிறதா தமிழ்நாடு அரசு?

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியை நம்பி இருக்கிறார்கள் என்றால், வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாலாற்றை நம்பி இருக்கிறார்கள். ஒருபுறம் காவிரியின் குறுக்கே பிரம்மாண்டமாய் மேகதாதுவில் அணையைக் கட்டி முடிக்க கர்நாடக அரசு துடிக்கிறது. மறுபுறம் பாலாற்றில் அடுத்தடுத்து தடுப்பணைகளை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றி வருகிறது ஆந்திரா.

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் தொடங்கும் காவிரி ஆறு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டிணா வழியாக தமிழ்நாடு, கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலுவை அடைந்து, ஒகேனக்கல் வழியாக சேலம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. அங்கிருந்து தமிழ்நாட்டின் காவிரி பாசனம் வழியாக கரூர், திருச்சி, தஞ்சை எனப் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து, நாகை மாவட்டம் பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

அதேபோல், கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா மாநிலத்தில் 99 கிலோ மீட்டர்களை கடந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் ஓடி, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இவ்விரண்டு நதிகளும், இடையில் பல்வேறு நதிகளின் இணைப்பால் தமிழ்நாட்டின் நீர் பாசனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இதைப் பங்கிட்டுக் கொள்வதில் நடக்கும் பல்வேறு அரசியல் காரணமாக ஆற்றின் பலன்களை தமிழ்நாடு முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகிறது.

குறிப்பாக, காவிரி நீரைப் பங்கிடுவதற்காக ஆணையம் அமைக்கப்பட்டுள்ள போதும், ஒவ்வொருமுறையும் தமிழ்நாட்டிற்கான தண்ணீரைப் போராடிப் பெற வேண்டிய நிலையே எஞ்சுகிறது. இதில் காவிரியின் குறுக்கே மேககாது என்னும் இடத்தில் அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, அதற்காக கடந்த பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கி இருக்கிறது.

மறுபுறம் சத்தமில்லாமல் பாலாற்றில் இதுவரை 21 தடுப்பணைகளைக் கட்டி தமிழ்நாட்டுக்கான தண்ணீரை தடுத்து வருகிறது ஆந்திரா அரசு. இதனால் பாலாறு நதிப்படுகை தமிழ்நாட்டில் பல இடங்களில் வறண்டு கிடக்கிறது. ஏற்கெனவே 21 தடுப்பணைகள் கட்டியும் போதாது என்று தற்போது புதிய தடுப்பணைகள் கட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கிவிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

அண்டை மாநிலங்கள் இப்படி தமிழநாட்டுக்கு வரும் தண்ணீரை அணைபோட்டு தடுக்க தமிழ்நாடு அரசு என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறதா என்பது எதிர்க்கட்சியின் கேள்வி. எங்களை மீறி ஒரு செங்களை கூட வைக்க முடியாது என்பது துறை அமைச்சர் துரைமுருகனின் பதில். தமிழ்நாட்டின் இருபெரும் நீர் ஆதாரங்கள் இப்படி மூலைக்கு மூலை முடக்கப்பட்டால் மாநிலத்தின் நிலை என்னாகும்? அரசு எப்போது மௌனம் கலைத்து அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதெல்லாம் மக்கள் கேள்வியாக இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow