நைட்வாட்ச்மேன் ஸ்பெஷல் இன்னிங்ஸ்: இங்கிலாந்து வீரர்களை திணறடித்த ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மெயின் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக நைட்வாட்ச்மேனாக களமிறங்கிய ஆகாஷ் தீப் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தினை விளாசி அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. தற்போது நடைப்பெற்று வரும் இறுதிப்போட்டியினை இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
இரு அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி கியா ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்திருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆரம்பித்த வேகத்திலேயே இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சிறப்பாக விளையாடி வந்த கருண் நாயர் 57 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, வழக்கம் போல லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். வெறும் 20 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நடப்பது டெஸ்ட் போட்டியா? டி20 போட்டியா? என வியக்கும் அளவிற்கு பந்து நாலாப்புறமும் எல்லைக்கோட்டினை தாண்டி பறந்தது. முதல் விக்கெட்டுக்கு வெறும் 13 ஓவர்களில் 92 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. கேரவ்லி 64 ரன்களிலும், டக்கட் 43 ரன்களிலும், போப் 22 ரன்களிலும், ரூட் 29 ரன்களிலும் அவுட்டாகினார்.
நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை இங்கிலாந்து அணி. ஹாரி ப்ரூக் மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவே சிரமப்பட்டனர். இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் தரப்பில் சிராஜ் மற்றும் ப்ரஸீத் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.
நைட்வாட்ச்மேன் ஸ்பெஷல் இன்னிங்ஸ்:
23 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸினை தொடங்கியது இந்திய அணி. என்ன பாஸ் பண்றீங்க? என புலம்பும் வகையில் கே.எல்.ராகுல் மோசமான ஷாட் அடித்து 7 ரன்களில் அவுட்டாகினார். சாய் சுதர்சனும் 11 ரன்களில் வெளியேற நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார் ஆகாஷ் தீப். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 52 ரன்கள் முன்னிலை வகித்தது இந்திய அணி.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஆகாஷ் தீப் விக்கெட்டினை எளிதில் இங்கிலாந்து அணி வீரர்கள் எடுத்துவிடுவார்கள் என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்த கதையே வேறு. ஆகாஷ் தீப் சிறந்த ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடியதோடு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார்.
மறுமுனையில் ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாட, 4 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 103 ரன்களை குவித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ஆகாஷ் தீப். இந்த போட்டியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதே ஓவல் மைதானத்தில் தான் 2011 ஆம் ஆண்டு நைட்வாட்ச்மேன் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 84 ரன்களை குவித்தார்.
சிறப்பாக விளையாடி வந்த ஆகாஷ் தீப் 66 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் வீரர்களும் ஆகாஷ் தீப்பினை எழுந்து நின்று பெவிலியனுக்கு வரவேற்றனர். தற்போது வரை இந்தியா இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்யுமா? என ரசிகர்கள் எதிர்ப்பார்பில் உள்ளனர்.
What's Your Reaction?






