கள்ளழகர் திருவிழா.. ஆட்சியரின் உத்தரவு தான்தோன்றித்தனமானது.. ரத்து செய்த ஹைகோர்ட் நீதிபதி
மதுரை சித்திரை திருவிழாவில் முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்வின்போது, பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமண நீரை நிரப்பி துருத்தி என்னும் சிறு குழாய் மூலம் கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிப்பது பக்தர்களின் நேர்த்திக்கடனாகவும் வழக்கமான ஒன்றாகவும் உள்ளது.
இதற்கிடையில் முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆட்சியரின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரஞ்சித் என்பவர் தொடர்ந்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன் இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்தது மத வழிபாட்டில் தலையிடுவது போல் உள்ளதால் அதனை நீக்கிக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
கள்ளழகர் செல்லும் பாதை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது எவ்வளவு பேர் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வில் கலந்து கொள்வர்? தற்போது 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ள நிலையில், இது பாரம்பரிய நடைமுறையை பாதிக்காதா? இவை தொடர்பாக ஏதும் புள்ளிவிவரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் கோவில் பாரம்பரிய நடைமுறைகளில் மாவட்ட ஆட்சியர் தான்தோன்றித்தனமாக உத்தரவு பிறப்பித்தது ஏன் என்றும் கோவில் நிர்வாகத்திடமோ, சட்ட வல்லுநர்களிடமோ கேட்காமல் எவ்வாறு இதுபோன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்கிறார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து ஆட்சியர் சங்கீதா விளக்க கடிதம் அளிக்க உத்தரவிட்டனர்.
எதனடிப்படையில் நபர்களை தேர்வு செய்கிறார்கள்? என்பது குறித்து கள்ளழகர் கோவிலின் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?