ஆராய்ச்சி மாணவர்கள் புகார் விவகாரம்- பேராசியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்கல்வித்துறை
பாதிக்கப்படும் ஆய்வு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆய்வு மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்கள் ஒருவர் மேடையில் ஆளுநரிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு ஆய்வு நெறியாளராக உள்ள பேராசிரியர் துன்புறுத்துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. பல இடங்களில் இது தொடர்பால முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வேறு வழியில்லாமல் ஆளுநரிடம் புகார் அளித்ததாக தெரித்தார்.
ஆராய்ச்சி மாணவர் பட்டமளிப்பு விழா மேடையில் புகார் கடிதத்தை அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆராய்ச்சி மாணவர் விடுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது விடுதி அறைகள், சமையலறை, கழிப்பறை உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள குறைகளைக் களையும்படி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும் அங்கு ஆராய்ச்சி மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் ஆய்வு நெறியாளர்கள் தங்களின் தனிப்பட்ட வீட்டு வேலையை செய்ய மாணவர்களை வற்புறுத்த கூடாது. மேலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.மேலும், பாதிக்கப்படும் ஆய்வு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
What's Your Reaction?