திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டியா? 

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அந்த தொகுதியில் திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டியா? 
mk stalin

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை பிடித்து, ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோற்கடித்து, அதன் கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெரம்பூர் தொகுதியை தக்க வைத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய, திருச்சி கிழக்கு உட்பட மொத்தம் 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்)  ஆகிய எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், திமுக இதில் போட்டியிடுமா? அல்லது இடைத்தேர்தலை புறக்கணிக்குமா? என்ற கேள்விகள் எழ, திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், திருச்சி கிழக்கில் திமுக யாரை வேட்பாளராக களமிறக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இத்தகையச் சூழலில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கில் களமிறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் உடன்பிறப்புகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஏற்கனவே, கொளத்தூர் தொகுதியில் யாரும் எதிர்பாராத தோல்வியை சந்தித்து இருந்தார் அப்போதைய சிட்டிங் சி.எம் ஆக இருந்த ஸ்டாலின். இவரின் தோல்வி திமுகவினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.  

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்,  முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவமானப்படுத்தும் விதமாகவும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலினை சீண்டும் விதமாகவும், தற்போதைய முதலமைச்சர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். அதில் ”எங்கே உங்க அப்பாவா காணும்” என்று விமர்சித்தது  திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  

முதலமைச்சரின் விமர்சனத்திற்கு, விரைவில் எங்களின் தலைவர் மீண்டும் வருவார் என்று திமுகவின் சீனியர்கள் பதிலடி கொடுக்க, ஒருவேளை இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்றம் வருகிறாரோ என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பின. 

இந்நிலையில், அறிவாலயத்திற்கு வருகை புரிந்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ”திருச்சி கிழக்கு தொகுதியில் நீங்கள் போட்டியிட உள்ளீர்களா?” என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு, பதிலளித்த முக ஸ்டாலின் இதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார். தான் போட்டியிடவில்லை என்று மு.க.ஸ்டாலின் மறுப்பு ஏதும் தெரிவிக்காததால், அதுகுறித்து தீவிரமாக அறிவாலயம் யோசித்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.  

எனவே, இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow