10 மாதங்களை கடந்தும் புழல் சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜி..நீட்டிக்கப்படும் நீதிமன்ற காவல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 31வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Apr 4, 2024 - 17:20
10 மாதங்களை கடந்தும் புழல் சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜி..நீட்டிக்கப்படும் நீதிமன்ற காவல்

செந்தில் பாலாஜி கடந்த 2011 -2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு அந்த வழக்க காலை சுற்றிய பாம்பாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்தே செந்தில் பாலாஜிக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனையும் நடந்தது.

 செந்தில் பாலாஜிக்கு  சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை மேல் சோதனையாக நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் தம்பி சிக்கும் வரைக்கும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்தான். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். 

அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இதய ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

தீபாவளி, தைப்பொங்கல், தமிழ் புத்தாண்டு என மாதங்கள் உருண்டோடி வருகின்றன. 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார். பலமுறை அவரது நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். 

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி D.V.ஆனந்த் உத்தரவிட்டார். இதன்மூலம் 31வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் அவர் பல மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார். இது தொடர்பாக நீதிமன்றம் சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இதையடுத்து கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்படி இருந்து உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அவரது தம்பி தலைமறைவாக இருப்பதுதான். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி  உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தார்.  

அவரது ஜாமீன் மனு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.  அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி  உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பது தேவையற்றது என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். ஜாமின் எப்போது கிடைக்கும் எப்போது வீட்டிற்கு போகலாம் என்று செந்தில் பாலாஜி எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தல் முடியும் வரைக்குமே அவர் வீட்டிற்கு திரும்பப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow