நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள்…மீட்டு கேரளாவில் கரைசேர்த்த கடலோர காவல் படை…

ஈரானில் இருந்து கடல் வழியாக 3,000 கிலோமீட்டர் கடந்து வந்து நடுக்கடலில் தத்தளித்த 6 தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

May 7, 2024 - 20:15
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள்…மீட்டு கேரளாவில் கரைசேர்த்த கடலோர காவல் படை…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மரிய டெனியல், ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியை சேர்ந்த நித்திய தயாளன், கலைதாஸ், அருண் தயாளன், வாலாந்தருவையை சேர்ந்த ராஜேந்திரன், பாசிபட்டினத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆகிய 6 மீனவர்கள் ஈரானுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். 

அங்கு அவர்களுக்கு முறையாக ஊதியமும், உணவும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்புவதற்காக படகில் புறப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரத்தை 14 நாட்கள் கடல் வழியாக பயணம் செய்து இறுதியில் இந்திய கடல் பகுதிக்குள், கேரள ஆழ்கடலுக்கு வந்து சேர்ந்துள்ளனர். 

அப்போது, அவர்களது படகிலிருந்த டீசல் முழுமையாக தீர்ந்துவிட்டதாக தெரிகிறது. நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் குறித்து அவர்களது உறவினர்கள், இந்திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு, 6 மீனவர்களையும் மீட்டு தரும்படி கோரிக்கை வைத்தனர். 

இதனையடுத்து, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 'அனுபவ்' என்ற கப்பலில் விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 6 மீனவர்களையும் மீட்டு கொச்சியில் கரை சேர்த்தனர். அப்போது, தங்களை காப்பாற்றிய இந்திய கடலோர காவல் படையினருக்கும், கொச்சி கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும்,  மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.. 


தொடர்ந்து, மீட்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow