என்னது 2 உணவுத்துறை அமைச்சரா? பேனர் பிழையால் குழம்பிய மக்கள்....
திண்டுக்கல்லில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு உணவுத்துறை அமைச்சர் என பேனர் அச்சிடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பொன்னகரம் பகுதியில் பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கும் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய அந்த பேனரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐ.பி.செந்தில்குமார் உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் என பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் பெயர் பதிவிடப்பட்டது.
இதனால் பொதுமக்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு மற்றும் குழப்பம் நிலவியது. மேலும் பேனரில் ரெண்டலை பாறைக்கு பதிலாக இரண்டலைப்பாறை என எழுத்துப் பிழைகளும் இருந்தன. மேலும் தனியார் பள்ளி அருகே விழா ஏற்பாடு செய்ததினால், மைக் செட்டினால் மாணவர்களுக்கு கல்வி பயில தொந்தரவாக இருந்ததாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என புலம்பினர். அரசு துறை அதிகாரிகள், பள்ளி வளாகம் மற்றும் பேனர் ஆகியவற்றை கவனிக்காமல் விழா ஏற்பாடு செய்தது அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.
What's Your Reaction?