சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. 8 பேர் உடல் கருகி பலி.. பலர் படுகாயம்.. முதல்வர் இரங்கல்
சிவகாசி: செங்கமலப்பட்டியில் இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கடந்த வாரம் அலுமினிய பவுடர் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. செங்கமலப்பட்டி - நாரணாபுரம் சாலையில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் செட் அமைத்து பேன்ஸி ரக பட்டாசு உற்பத்திக்கு தேவையான அலுமினிய பவுடர் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆலையில் பணியாற்றிய பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
இதில் சின்ன கருப்பு 40 சதவீதம், வீரலட்சுமி 60 சதவீதம், அன்புராஜ் 35 சதவீதம், சதீஷ்குமார் 50 சதவீதம், மகேந்திரன் 30 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து நிகழ்ந்து இரு தினங்களுக்குள் செங்கமலப்பட்டியில் இன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 7 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஏராளமானோர் அறைக்குள் சிக்கியிருந்தனர்.
அறைக்குள் சிக்கியவர்கள் மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். உயிரிழந்தர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது போல பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?