ஜூலை 3-ல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..!
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் ஜூலை 3-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேசப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோமீட்டர் முதல் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 3-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஜூலை 2-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பதிவாகக்கூடும்.
ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், ஜூலை 3-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஜூலை 4-ம் தேதி கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?