வங்கக் கடலில் உருவான தாழ்வு பகுதி: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் தமிழகத்தின் மேற்கு மலை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை செயல்பாடு அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களிலும், வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாள்(ஜூலை 4) கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரியிலும் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?