சேலத்தில் மக்கள் கொடுத்த மனுக்களை குப்பையில் வீசிய அதிகாரிகள் - அதிரடி காட்டிய கலெக்டர்

சேலம் மாவட்ட கலெக்டர் பிரிந்தாதேவி, மனுக்களை கவனக்குறைவாக கையாண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Nov 10, 2024 - 13:12
சேலத்தில் மக்கள் கொடுத்த மனுக்களை குப்பையில் வீசிய அதிகாரிகள் - அதிரடி காட்டிய கலெக்டர்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் குப்பையில் வீசப்பட்டது தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட அதிகாரி மீது கலெக்டர் அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த காந்திமதி, சடையம்மாள், மஞ்சினி பகுதியை சேர்ந்த  மருதாம்பாள், தென்னங்குடிபாளையத்தை சேர்ந்த, சுந்தரம் உள்ளிட்டோர் கடந்த 4ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு  அளித்தனர்.இந்த மனுக்கள் மீது  மனு எண் குறிப்பிட்டு, ‘சீல்’ வைத்து, ஆத்தூர் ஒன்றிய பி.டி.ஓ.,க்கு  பரிந்து செய்யப்பட்டது. இந்நிலையில், இவர்களது  மனுக்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் கடந்த 6ம் தேதி  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம்  பேருந்து நிலைய  பகுதியில் உள்ள குப்பைகளில் கிடந்துள்ளது.

இதைபார்த்த  சின்னசேலம் பகுதியை சேர்ந்த  வீராசாமி என்பவர் அந்த மனுவை பிரித்து பார்த்து அதில் உள்ள போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு மனு கிடப்பதை குறித்து  தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மனுதாரர் அவரிடம் கீழே கிடந்த மனுக்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த நபர் தபால் மூலம் குப்பையில் கடந்த மனுக்களை அனுப்பியுள்ளார்.மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள், வேறு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலைய குப்பை பகுதியில் கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் பிரிந்தாதேவி, மனுக்களை கவனக்குறைவாக கையாண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற கவனக்குறைவாக அதிகாரிகள் செயல்படக்கூடாது என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow